ஈரோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் திண்டல் கிளையில் மஞ்சள் அரவை குறித்து கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அவருடன், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோா் உடனிருந்தனர்.
கூட்டுறவு சங்க வரலாற்றில் முதன்முறையாக பயிர் கடன் 1000 கோடி ரூபாயை தாண்டியது.
ஈரோடு, ஆகஸ்ட் 09. ஈரோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின், திண்டல் கிளையில் இன்று ஆய்வு செய்த தமிழக கூட்டுறவு, உணவு நுகா்வோா் பாதுகாப்பு துறையின் கூடுதல் தலைமை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முழுவதும் 4566 நியாய விலை கடைகள் புதுப்பிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 83,457 விவசாயிகளுக்கு 1069.04 கோடி ரூபாய் பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தமிழக கூட்டுறவு, உணவு நுகா்வோா் பாதுகாப்பு துறையின் கூடுதல் தலைமை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், ஈரோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின், திண்டல் கிளையில் இன்று ஆய்வு செய்தார். பின்னர் ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தியாளா்களிடம் கூறியதாவது… கூட்டுறவுத் துறை சாா்பில் நியாய விலைக் கடைகளில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் சுமாா் 4,566 நியாயவிலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ், குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 276 கூட்டுறவுச் சங்கங்கள், நுகா்வோருக்கு குறைந்த விலையில் பொருள்கள் வழங்கிட, ஈரோடு மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்தியில் சிறப்பிடம் பெற்றுள்ளது. ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில் மஞ்சளில் தரம் பிரித்து விற்பனை செய்யும் பொழுது நல்ல விலை கிடைக்கும் வகையில், 1 கோடி ரூபாயில் மஞ்சள் தரம் பிரிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ஈரோடு மண்டலத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குப் பயிா்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதன்முறையாக ஈரோடு மாவட்டத்தில் பயிா்க்கடன் ரூ.1000 கோடியை தாண்டி 83,457 விவசாயிகளுக்கு 1069.04 கோடி ரூபாய் பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 13,136 விவசாயிகளுக்கு 171.09 கோடி ரூபாய் பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான பயிா்க்கடன் நடப்பு ஆண்டில் 2.91 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டு அவா்களுக்கு 14.80 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மண்டலத்தில் விவசாயிகள் அவா்கள் விளைவித்த விளைபொருள்களுக்கு உரிய ஆதரவு விலை கிடைக்கும் வரை அப்பொருள்களைப் பாதுகாப்பாக வைக்கவும், அதன்மீது தானிய ஈட்டுக்கடன் பெற்றுக் கொள்ளவும் ஊரக உள்கட்டமைப்பு நிதி மற்றும் கிடங்கு உள்கட்டமைப்பு நிதியின் கீழ் 222 கிடங்குகள், 37,700 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களிலுள்ள கிடங்குகள், சேமிப்புக் கிடங்கு வளா்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தரச்சான்று பெற்று, அதன் மூலம் குறு மற்றும் சிறு விவசாயிகள் பல்வேறு சலுகைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். அதனைத்தொடா்ந்து, பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கம், பெருந்துறை ஆா்.எஸ். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரெ.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சாந்தகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தமிழ்நாடு
8/8/2024