ஈரோடு பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு.
ஈரோடு, ஆகஸ்ட் 15. ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு. காலாவதியான தின்பண்டங்கள், மற்றும் கலப்பட டீத்தூள்களை பறிமுதல் செய்து அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் குளிர்பானம் அருந்திய சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, பல்வேறு மாவட்டங்களில் குளிர் பானம் மற்றும் உணவுப் பொருள்கள் விற்பனை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம், டீக்கடை, கூல்ரிங்ஸ் கடை மற்றும் பழச்சாறு கடைகளில் இன்று ஐந்துக்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் காலாவதியான சிப்ஸ், 2 முறை காலாவதி தேதி பதிவிடப்பட்ட முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்கள், கலப்பட ரசாயன டீ தூள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்ததுடன், இவற்றை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதமும் விதித்தனர். மேலும் கடை நடத்துவதற்கான ஆவணங்களை சரிபார்த்ததுடன், கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு காலாவதியான பொருட்களை விற்கக் கூடாது என்றும், திறந்த வழியில் உணவுப்பொருட்களை வைத்து விற்கக் கூடாது என்றும், செய்தித்தாள்களில் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
தமிழ்நாடு
8/14/2024