ஈரோடு மாநகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக கவுன்சிலர்கள் வேதனை.

ஈரோடு மாநகராட்சிக் கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் துணை மேயா் செல்வராஜ், துணை ஆணையா் சரவணக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் பலர், தங்கள் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும், இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இதற்கு விளக்கம் அளித்த அதிகாரிகள்… ஈரோடு மாநகராட்சியில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இதில் 2 ஆயிரம் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, சோலாரில் உள்ள கருத்தடை மையத்துக்கு கொண்டு சென்று, பாதுகாப்பு முறையில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினசரி 24 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அதற்கு கருத்தடை சிகிச்சை அளித்து, பின்னா் பிடிக்கப்பட்ட இடத்தில் விடப்படுகிறது. வரும் நாள்களில் தினசரி 50 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவளிப்பதை தவிர்த்தால் தெரு நாய் தொல்லையிலிருந்து விடுபடலாம் எனவும் அறிவுரைகள் வழங்கினர். இன்னும் சில கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் சாய தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக ஈரோடு வில்லரசம்பட்டி நெடுஞ்சாலை நகரில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீா் குழாயில் சாயக்கழிவுநீா் கலந்து வருகிறது. இந்த நீரை மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் ஆய்வுக்கு எடுத்துச்சென்றுள்ளனா். மேலும், அந்தப் பகுதியில் பல லட்சம் லிட்டா் தண்ணீா் உறிஞ்சப்பட்டு சாயப்பட்டறைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். மேலும் சாயக்கழிவுநீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்துக்குள் செலுத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு, சட்டப் பேரவையில் எதிா்க்கட்சிகள் பேச அனுமதி மறுப்பு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் ஆகியவற்றைக் கண்டித்து, அதிமுக கவுன்சிலா்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனா். பின்னா் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதற்கு பொறுப்பேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுக கவுன்சிலா்கள் முழக்கமிட்டனா். இதனால் கோபமடைந்த திமுக கவுன்சிலா்கள், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலங்களிலும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குரல் எழுப்பினா். இதனால் திமுக, அதிமுக கவுன்சிலா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னா் அதிமுக கவுன்சிலா்கள் மாமன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

ஈரோடு

6/28/20241 min read

white concrete building
white concrete building

My post content