ஈரோட்டில் புகழ்பெற்ற அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழா இன்று தொடங்கியது.
ஈரோடு, ஆகஸ்ட் 07. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழா இன்று துவங்கியது. இதனை அடுத்து குதிரைச்சந்தையில் விலை உயர்ந்த குதிரைகளை காண பொதுமக்கள் ஆர்வம். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற அருள்மிகு குருநாதசுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் போது மாட்டு சந்தை, குதிரை சந்தைகளும் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று துவங்கியது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இங்கு நடைபெற்ற குதிரை சந்தையில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலான, காட்டியா வாடி, மார்வார், சாப்ஜா உள்ளிட்ட விலை உயர்ந்த குதிரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதே போல் காங்கயம், மயிலை, காரி, சிந்து, ஜெர்ஸி, பர்கூர் மலை இன மாடுகளும் விற்பனைக்கு வந்துள்ளது. மாடுகள் ஜோடி 30 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், மாடு குதிரைகளுக்குத் தேவையான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஞாயிற்று கிழமை வரை நடைபெறும் இந்த சந்தைகளைப் பார்க்க பொதுமக்கள் அதிகளவில் வருவதால் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு
8/7/2024